புள்ளியாகிய நான்

உழைப்பவன் நெற்றியில்

புள்ளியாய் நான்

வியர்வைத்துளி


புல்லின் நுனியில்

புள்ளியாய்   நான்

பனித்துளி


வானத்தில் ஒளிரும்போது

விண்மீன் என்பெயர்

வாசலில் நெளியும்போது

கோலம் என்பெயர்


நெற்றியில் இட்டுக்கொண்டு

திலமென்கிறார்கள்

குழந்தைகளின்

கன்னத்திலிட்டு

திருஷ்டியென்கிறார்கள்


சோற்றுக்கு வழியின்றி

சொற்பமாய் திருடினால்

கரும்புள்ளி செம்புள்ளி 

குத்துகிறார்கள்


கணக்கேயில்லாமல்

கடன்களை ஏப்பம்விட்டால்

பெரும்புள்ளி என்கிறார்கள்.


சமூக அவலத்தை

சாடும் கவிதையொன்றின்

முற்றுப் புள்ளியாவதே

முழு  விருப்பமெனக்கு.       

கருத்துகள்

கருத்துரையிடுக